×

அரசு ஓய்வு விடுதி பெயரில் அதிகாரிகள் குடியிருப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

ஊட்டி, ஜூன் 25:  நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் சிலர் தங்களது குடியிருப்புகளுக்கு விதிமீறி ஆழ்துளை கிணறு அமைத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரியில் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் நீலகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற இன்னசென்ட் திவ்யா, மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதித்தார். இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த இரு ஆண்டுளாக மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது மிகவும் குறைந்தது. ஒரு சில பகுதிகளில் அரசு கட்டிடங்களுக்கு மட்டும் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதியளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், இதனையும் சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர். ஊட்டி கலெக்டர் பங்களா அருகே இந்த முறைகேடு நடந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்பி ஓய்வு விடுதி உள்ளது.

 இந்த விடுதியின் அருகே முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் குடியிருப்பு உள்ளது. ஆரம்பி ஓய்வு விடுதிக்கு தண்ணீர் வேண்டும் என ேகாரி முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும் அனுமதியளித்துள்ளது.   ஆனால், இவர்கள் ஆரம்பி ஓய்வு இல்லத்தின் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்காமல், அருகில் உள்ள முதுமலை துணை இயக்குநர் குடியிருப்பின் பின்புறம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை நேற்று மேற்கொண்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது, எங்களிடம் அனுமதி கடிதம் ஒன்று கொடுத்தனர். அதில், இந்த குடியிருப்பின் பின்புறம், ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி கடிதம் கொடுத்ததால், நாங்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இன்று (நேற்று) ஒரு நாள் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள அனுமதியுள்ளதால், இன்று (நேற்று) காலை முதல் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம், என்றனர். ஓய்வு விடுதி பெயரில் அனுமதி பெற்றுவிட்டு, அதிகாரிகளின் குடியிருப்பு வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.    தற்போது தண்ணீர் இன்றி அனைத்து தரப்பு மக்களும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அரசு அதிகாரிகள் மட்டும் தங்களது பதவிகளை பயன்படுத்தி இது போன்று ஆழ்துளை கிணறு அமைத்து கொள்வது நீலகிரியில் தொடர்ந்து நடந்து வருவதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுபோன்று ஆழ்துளை கிணறு அமைக்கும் போது, அனுமதியளிக்கும் இடத்தினை முதலில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்த பின் அனுமதியளித்தால் நல்லது.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்