போலி ஆவணங்கள் மூலம் வங்கிகடன் பெற்றவர் கைது

கோவை, ஜூன் 25: கோவையில் போலி ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து வீட்டுக்கடன் வாங்கியவரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் என்ற சத்தியராஜ் (37). சரவணம்பட்டி பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரியா (35) என்பவரை தனது உடன் பிறவாத சகோதரி என்று செந்தில்குமார் அறிமுகம் செய்துவைத்துள்ளார். மேலும், போலி ஆவணங்கள் கொடுத்து பிரியா பெயரில் ரூ.28 லட்சம் வீட்டுக்கடன் பெற்றுள்ளார். ஆனால்,தவணையை முறையாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் அளித்த ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து  பார்த்த போது அத்தனையும் போலி ஆவணங்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து வங்கி மேலாளர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரித்தனர்.அப்போது செந்தில்குமார் கடந்த 2017ம் ஆண்டு வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.14 லட்சம் கடன் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து
இந்த இரண்டு வழக்கிலும் செந்தில்குமாரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.

Tags :
× RELATED மும்பையில் உயிரிழந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் ரூ. 8.77 லட்சம்!