பேச மறுத்த காதலிக்கு கத்திக்குத்து

கோவை, ஜூன் 25: தன்னுடன் பேச மறுத்ததால் காதலன் ஒருவர் தனது காதலியை  குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தா (20). இவர் சொர்ணூர் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த சுரேஷ் (22) என்பவருடன் அமிர்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அமிர்தாவுக்கு கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அச்சகம் ஒன்றில் பயிற்சியாளராக பணி கிடைத்துள்ளது. தடாகம் சாலையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியவாறே அமிர்தா வேலைக்கு வந்து சென்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில், காதல் குறித்து பெற்றோருக்கு தெரிந்துவிட்டதாக சுரேஷிடம் கூறிய அமிர்தா கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து சுரேஷ் நேற்று கோவை வந்துள்ளார். நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த அமிர்தாவுடன் பேசியுள்ளார். ஆனால், அமிர்தா அவருடன் பேச மறுத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த கூரான ஆயுதத்தால் அமிர்தாவின் அடிவயிற்றில் குத்தினார். அமிர்தா அலறியதை கேட்ட அப்பகுதி மக்கள் சுரேஷை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், படுகாயமடைந்த அமிர்தாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் அங்கு சென்று சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பேஸ்புக் பழக்கத்தால் அறிமுகமாகி...