×

5 கிலோ மீட்டர் அலைந்து குடிநீர் பிடிக்கும் மக்கள்

மானூர், ஜூன் 25:  மானூர் சுற்றுவட்டாரத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால், 5 கிலோ மீட்டர் அலைந்து திரிந்து குடிநீர் பிடித்துச் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.  நெல்லை மாவட்டம் மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வானம் பார்த்த பூமியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் தண்ணீர், சிற்றாற்றில் கரைபுரளும் போது இங்குள்ள பெரிய குளங்களான மானூர், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீர் வரும். இதனை கொண்டு இப்பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு, குளங்கள் தூர்வாரப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு ஆண்டு தண்ணீரின் அளவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் நிலத்தடி நீரும் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. கடந்த சில ஆண்டுகளாக விவசாய சங்க பிரதிநிதிகள் சிலரது முயற்சியால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு ஓரளவுக்கு தண்ணீர் கொண்டு வந்து சேருகிறது.  இந்நிலையில் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக நீடிக்கும் கோடை வெயிலால், நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதேபோல் மானூர் பகுதியிலும் குளங்களில் தண்ணீரின்றி நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்துள்ளது. இதனால் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடந்து வந்த பகுதியிலும் விவசாயம் நடைபெறவில்லை. தற்போது மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தண்ணீர் தேடி மக்கள், காலிகுடங்களுடன் அலைந்து திரிவது வாடிக்கையாகி விட்டது.

கானார்பட்டியை சேர்ந்த விவசாயி மேசே, நேற்று காலை குடிநீருக்காக 5 கிமீ தொலைவில் உள்ள அழகியபாண்டியபுரம் சத்திரம் பகுதிக்கு சிற்றாற்று பாலத்தை கடந்து 6 குடங்களில் தண்ணீர் பிடித்துச் செல்வதாக கூறினார். மக்கள் மட்டுமின்றி இப்பகுதியில் வசிக்கும் பறவைகளும் தண்ணீர் தேடி அலைவது கவலையடைய செய்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தார். இங்குள்ள காடுகளிலும், வயல்வெளிகளிலும் பறவைகள் தண்ணீர் திரிகின்றன. குடிநீர் குழாய் தென்பட்டால் அதில் இருந்து ஒரு சொட்டு நீராவது வராதா? என காகம் உள்ளிட்ட பறவைகள் காத்திருப்பதையும் காண முடிகிறது. எனவே பறவைகளின் தாகம் தீர்க்க, இப்பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குட்டைகளை வெட்டி தினமும் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு
மானூரில், மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சேகர் கூறுகையில், மானூர் பஜார் குடியிருப்பு பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வாரம் இருமுறை ஊராட்சி மூலம் தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுகிறது. சில வீடுகள், வழிபாட்டு தலங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனை வியாபாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் தெரு நல்லிகளில் கண்ணீர்போல் தண்ணீர் விழுகிறது. காத்திருந்தும் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா