நடுரோட்டில் எஸ்ஐயை சரமாரி தாக்கிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது

பெரம்பூர்:  புளியந்தோப்பு  காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு  11 மணியளவில் தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய வாலிபர்,  நியூ பேரன்ஸ் சாலையில்  ஒருவரை 20 பேர்  அடித்து உதைப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.   அப்போது, பணியில் இருந்த எஸ்ஐ ஆனந்த், பெண் எஸ்ஐ சஜிபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும்  ஒரு கும்பல்  தப்பி ஓடியது. அதில்  ஒருவரை எஸ்ஐ ஆனந்த் மடக்கி பிடித்து விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு போதையில் வந்த 3 பேர், பிடிபட்ட வாலிபருக்கு ஆதரவாக எஸ்ஐ ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சரமாரியாக தாக்கினர். உடனே பெண் எஸ்ஐ இதுகுறித்து அருகில் உள்ள ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், பட்டாளம் பென்சினர் லைன் இ-பிளாக் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வெங்கடேஷ்வர ராவ் (62). ஜானகிராமன் (41), ஜெகதீஷ்குமார் (38) என்பதும், மது போதையில் ஏற்பட்ட தகராறில் எஸ்ஐயை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான குற்றவாளிகளின் உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் புளியந்தோப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : soldiers ,SI ,soldier ,
× RELATED பனிச்சரிவு 2 வீரர்கள் பலி