நீர் வரத்து கால்வாயில் குப்பை குவியல்: புழல் ஏரி மாசுபடும் அபாயம்

புழல்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்று சோழவரம் ஏரி. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் மதகு வழியாக திறக்கப்படும் உபரிநீர் நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல், பாலகணேசன் நகர், எம்ஜிஆர் நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரம் வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சென்று புழல் ஏரியில் கலக்கும். இந்த கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் புதர்மண்டி தூர்ந்துள்ளது. இந்நிலையில், அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் இந்த நீர் வரத்து கால்வாயில் விடப்படுவதால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளதால், சோழவரம் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டால், இந்த கால்வாயில் உள்ள குப்பை கழிவுகள் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீர் வரத்து கால்வாயில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: