அகர்வால் கண் மருத்துவமனையின் சென்னை தலைமை மையம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:  சென்னையில் அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய தலைமை மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில்  அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய தலைமை மையத்தை திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதிதாக பல்லாயிரம் கண்களுக்கு புதிய ஒளியை கொடுக்கப் போவதற்காகத் தான், இந்த புதிய தலைமை மையம் பயன்பட போகிறது. அப்படி ஒளிவீசும் கண்களை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய அகர்வால் மருத்துவமனை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல, அயல் நாடுகளுக்கு எல்லாம் ஒரு விடிவெள்ளியாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

கண் என்பது பார்வைக்கு மட்டுமல்ல, படிப்பதற்கும், காட்சிகளை ரசிப்பதற்கும் அது தான் முக்கியமாக இருக்கின்றது. எது நல்லது, எது கெட்டது என்று அறிந்து கொள்வதற்கும் கண் தான் முக்கியமாக உள்ளது. எனவே பார்வைக் கோளாறால் மக்கள் பாதிக்கப் படக்கூடாது என்று, 1957ல் இந்த மருத்துவமனையை  ஜெய்வீர் அகர்வால் துவங்கி இருக்கிறார். அந்த அடிப்படையில் தான் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1969ல் அவருடைய பிறந்த நாள் அன்று மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் கண் ஒளி திட்டத்தை செயல்படுத்தினார். இன்று நான், கண் ஒளி வழங்கக்கூடிய இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கண் ஆரோக்கியத்திற்கு அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், அதே கவனத்தை உறுப்பு நாடுகள் செலுத்த வேண்டும்.

தேசிய அளவில் ஒருங்கிணைந்த கண் ஆரோக்கியத் திட்டம் உருவாக்க வேண்டும். கண் ஆரோக்கியத்தை வலுப்படுத்த வேண்டும். எனவே பார்வையை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு மருத்துவமனைகளுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் உண்டு. உலக அளவில் ஏற்படக்கூடிய கண் பார்வை கோளாறில் 80 சதவீதம் சரி செய்யப்படக்கூடியது என்ற நம்பிக்கை உலக சுகாதார நிறுவனத்திற்கு இருக்கின்றது. அதன் பயனாக 2010ம் ஆண்டு இருந்ததைவிட 2019ம் ஆண்டு தவிர்க்க முடிந்த பார்வை கோளாறுகளை 25 சதவிதம் குறைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: