அஞ்சப்பர் ஓட்டலில் ரூ17.5 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளரை தனி அறையில் அடைத்து பைப், பிரம்பால் அடித்து சித்ரவதை

* நிர்வாக இயக்குநர் மீது வழக்குப்பதிவு

* பாண்டிபஜாரில் பரபரப்பு சம்பவம்
Advertising
Advertising

சென்னை: சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நான், பாண்டிபஜாரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலின் ஊழியர். என்னை, ஓட்டலின் நிர்வாக இயக்குநர் தனி அறையில் பூட்டி வைத்து, அடித்து துன்புறுத்துகிறார். அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுங்கள்,’’ என கூறி அழுதுள்ளார். அதன்பேரில், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார், பாண்டி பஜார் தியாகராய சாலையில் உள்ள அஞ்சப்பர் ஓட்டலுக்கு ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது  ஓட்டல் ஊழியர்கள் போலீசாரை உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். ஆனால் போலீசார் தடையை மீறி ஓட்டலில் உள்ள அறைகளை சோதனை நடத்தினர்.

அப்போது தனி அறை ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே போலீசார் அந்த வாலிபரை அதிரடியாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: சென்னை சிட்லபாக்கம் கைலாஷ் காலனி கோகிலா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி (27). இவர் பாண்டிபஜாரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஞ்சப்பர் ஓட்டல் தாம்பரம் கிளையின் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக வேலை செய்து வந்த இவருக்கும் நிர்வாகத்திற்கு பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் துரைபாண்டிக்கு நிர்வாகம் சரியாக ஊதியம் கொடுக்காமல் இருந்தனர். ஒரு கட்டத்தில் துரைபாண்டி கடந்த 11ம் தேதி வேலையில் இருந்து நின்று விட்டார்.

பிறகு தனது ஊதிய பணத்தை ஓட்டலின் நிர்வாக இயக்குநர் கந்தசாமியிடம் போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு அவர் நேரில் வந்து சம்பள பணத்தை வாங்கி செல், என்று கூறி பாண்டிபஜாரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். அதன்படி துரைபாண்டி நேற்று முன்தினம் அஞ்சப்பர் ஓட்டலின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது ஓட்டலின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி ‘நீ பணியாற்றிய காலத்தில் ₹17,50,000 பணம் கையாடல் செய்துள்ளாய். அதை திருப்பி,’ கொடு எனக்கூறி ஓட்டலின் தனி அறையில் அடைத்து ைவத்து பைப் மற்றும் பிரம்பால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

அப்போது, பணத்தை கொடுக்கவில்லை என்றால் உன்னை உயிரோடு விடமாட்டேன், என்று இடைவெளி இல்லாமல் பகல் 12 மணி முதல் இரவு 9.30 மணி வரை தண்ணீர் மற்றும் உணவு கூட கொடுக்காமல் சேரில் கட்டி ைவத்து அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட அஞ்சப்பர் முன்னாள் ஊழியர் துரைபாண்டி கொடுத்த புகாரின்படி, பாண்டிபஜார் போலீசார் அஞ்சப்பர் ஓட்டிலின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பாண்டி பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: