கழுகுமலையில் மின் மோட்டார்கள் பறிமுதல்

கழுகுமலை, ஜூன் 25:  கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவதால் ஒரு சில பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தொடர்ந்து பேரூராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் தனசிங் (விளாத்திகுளம்), சுந்தரவேல்(எட்டயபுரம்), முருகன் (சாத்தான்குளம்), ரெங்கசாமி(நாசரேத்), உஷா(கழுகுமலை) ஆகியோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் சீவலப்பேரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளான ஆறுமுகம்நகர், அண்ணாபுதுத் தெரு, ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.  அப்போது சட்ட விரோதமாக மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆறுமுகநகர் பகுதியில் 12 மோட்டாரும், அண்ணாபுதுத்தெரு பகுதியில் 8 மோட்டார்கள் என 20 மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாரை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் முழங்கினர்.  

தகவலறிந்ததும் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, கழுகுமலை பேராட்சி நிர்வாக அலுவலர் உஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், ஏற்கனவே, பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு பலமுறை மோட்டார் பயன்படுத்தக்கூடாது என்று முன்னறிவிப்புகள் செய்தும், மீறி சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட மோட்டார்களையே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாரை உரியவர்களிடம் கொடுக்கக்கூடாது என தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாரை வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டார் உரியவர்களிடம் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: