×

நாகர்கோவில் அருகே கடன் பிரச்னையில் கணவன், மனைவி தற்கொலை முயற்சி

நாகர்கோவில், ஜூன் 25: நாகர்கோவில் அருகே கடன் பிரச்சினையில் கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயன்றனர். இந்த சம்பவம்  தொடர்பாக 4 பேர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை சுவிசேஷபுரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (39). கொத்தனார். இவரது மனைவி ஜேசு ரோஸ்லெட் (34). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சிம்சோன் தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் பழவூரில் வசித்து வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன், தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். சிம்சோனுக்கு அதிக கடன் தொல்லை இருந்துள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து தனது மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கே வந்து தகராறு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கணவன், மனைவி இருவரும் தனியாக படுத்திருந்தனர். மகன்கள் இருவரும் வீட்டின் மற்றொரு அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த போது கட்டிலில் சிம்சோன் மற்றும் அவரது மனைவி ஜேசு ரோஸ்லெட் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். பக்கத்தில் கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் கடன் பிரச்சினை, மிரட்டல் விடுத்தவர்கள் தொடர்பாக எழுதி இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இது குறித்து சிம்சோன் மகன் அஜித் (19) சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் சுசீந்திரம் வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த சேகர், சதீஷ், பழவூரை சேர்ந்த ஜெயராஜ், வடக்கன்குளத்தை சேர்ந்த அருள்ஜோதி ஆகியோர், கடன் கொடுக்க வேண்டிய விவகாரத்தில் தனது தந்தையை மிரட்டியதாகவும், இதனால் மனம் உடைந்து தனது பெற்றோர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்றும் கூறி இருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் சேகர், சதீஷ் மற்றும் ஜெயராஜ், அருள்ஜோதி ஆகிய 4 பேர் மீதும் மிக அதிகப்படியான வட்டி வசூலிப்பு தடுப்பு சட்டம் - 2003 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேகர், சதீசுக்கு சீட்டு பிடித்த வகையில் ரூ.2.50 லட்சமும், ஜெயராஜூக்கு ரூ.50 ஆயிரமும், அருள்ஜோதிக்கு ரூ.2 லட்சமும் கொடுக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டுக்கே சென்று மிரட்டியதுடன், தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசியதால் தான், சிம்சோன் தனது மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் கூறி உள்ளனர்.

Tags : suicide ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...