×

15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் கசிவு நீரை பிடிக்க காத்திருக்கும் மக்கள்

தம்மம்பட்டி,  ஜூன் 21:  தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில், 15 நாட்களுக்கு ஒரு  முறை குடிநீர் விநியோகிப்பதால், சாலையோரம் கூட்டு குடிநீர் திட்ட தொட்டியில் கசியும் நீரை பிடிக்க, பொதுமக்கள் மணி  கணக்கில் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தில், சுமார் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

தற்போது நிலவும்  கடும் வறட்சியால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை  கிணறுகளும் வறண்டு கிடக்கிறது. இதனால், உப்பு தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்திற்கு, மேட்டூர்-ஆத்தூர்  கூட்டு குடிநீர் திட்டத்தில், கடந்த 3 மாதங்களாக 15  நாட்களுக்கு ஒருமுறை, ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், ஒரு வீட்டுக்கு 10 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீரின்றி, மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்  புகார்  கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வண்டி  தண்ணீரை ₹200 முதல் ₹500 வரை கொடுத்து வாங்கும் நிலை மக்களுக்கு  ஏற்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், தினமும் சாலையோரம் உள்ள கூட்டு  குடிநீர் திட்ட வால்வில், சொட்டு சொட்டாக கசியும் தண்ணீரை  பிடிக்க மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம்   உலிபுரம் கிராம மக்களுக்கு லாரி மூலம் ஆழ்துளை கிணற்று தண்ணீரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை