சீர்தூக்கி விடும் திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மின்சாரம், மானியம் வழங்காததால் அவதி

காடையாம்பட்டி, ஜூன் 21:   பிற்பட்டோர் நலத்துறை மூலம் சீர் தூக்கி விடும் திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மானியம் மற்றும் இலவச மின்சாரம்  வழங்க அதிகாரிகள் மறுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளானர். சேலம் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை சார்பில், நலிவடைந்த சிறுகுறு விவசாயிகளை  சீர்தூக்கி விடும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்த, ₹50 ஆயிரம் மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்,  காடையாம்பட்டி வட்டத்தில் 10 விவசாயிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும்  200க்கும் மேற்பட்ட விவாசாயிகள், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறைக்கு விண்ணப்பித்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் பெற்று தங்களது தோட்டத்தில் ஆள்துளை கிணறு அமைத்தனர்.

ஆனால், 2 ஆண்டுகள் ஆகிய போதிலும், மின்மோட்டார், இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருகின்றனர். இதனால் ஆழ்துளை கிணறு இருந்தும் விவசாயம் செய்ய முடியாமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனிடையே  கூட்டுறவு சங்கங்கள் கடனை கட்டச்சொல்லி விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

மின்சார வாரிய அலுவலகத்தில் இலவச மின் இணைப்பு கேட்டால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்திற்கு 216 பேருக்கு மின் இனைப்பு கொடுக்க கூறி அரசாணை வெளியிட்டது. இதில் 213 பேருக்கு வழங்கி விட்டோம். மீதமுள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்க இன்னும் அரசாணை வெளியாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மானியத்தொகையை விடுவிக்குமாறு  பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், எங்களுக்கும் இதுவரை அரசாணை வரவில்லை என கூறி கலெக்டரிடம் மனு கொடுக்கும் படி தெரிவித்துள்ளனர். இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: