ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்

கெங்கவல்லி, ஜூன் 21: பெண் விரிவுரையாளர் பிரச்னையில், அரசு ஆசிரியர்  பயிற்சி நிறுவன முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வழக்கறிஞர்கள் கெங்கவல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த ஆணையாம்பட்டியில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதல்வராக சித்திரபுத்திரன்(48) உள்ளார். இங்கு இளநிலை விரிவுரையாளராக விசாலாட்சி(37) என்பவர் பணியாற்றி வருகிறார். முதல்வர், விரிவுரையாளர் விசாலாட்சி இடையே  நிர்வாக ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

இதில் முதல்வர் சித்திரபுத்திரன், விரிவுரையாளர் விசாலாட்சியின் நிர்வாக ரீதியிலான விளக்க கடிதத்துக்கு, வழக்கறிஞர் தொழிலை இழிவுபடுத்தும் வகையில் பரிகாசம் செய்ததாக விசாலாட்சி, தனது கணவரான வக்கீல் கணேஷ் சங்கரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று துறையூர் வழக்கறிஞர்கள் நல சங்கத்தலைவர் உத்திராபதி, செயலாளர் செல்லதுரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட  வழக்கறிஞர்கள், கெங்கவல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்ஐ காணிக்கை சாமியிடம் மனு வழங்கினர்.

இதையடுத்து போலீசார் முதல்வர் சித்திரபுத்திரனை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து, புகார் குறித்து விசாரணை மேற்கொண்டார். நடந்த சம்பவத்துக்கு  வழக்கறிஞர் சங்கத்தினரிடம், முதல்வர் மன்னிப்பு கேட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த வழக்கறிஞர்கள், வரும் 28ம் தேதியன்று முதல்வரின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, போலீசாரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கினர்.

மேலும், விரிவுரையாளர் விசாலாட்சியின் கணவர் கணேஷ் சங்கர், தனிப்பட்ட முறையில் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், நிதி ஒதுக்கீடு பிரச்னையில் விளக்க கடிதம் வழங்கியது மற்றும் அடக்குமுறையை கையாண்டது குறித்து தெரிவித்திருந்தார். அது பற்றியும் போலீசார் முதல்வர் சித்திரபுத்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: