×

கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 21:  திருச்செங்கோடு அருகே கழிவுநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அணிமூர் கிராமத்தில், கடந்த 2003ம் ஆண்டு திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம், 11 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி,குப்பை கழிவுகளை கொட்டி வைப்பதற்காக பயன்படுத்தியது.

இங்கு உரக்கிடங்கு அமைத்து நகராட்சியின் 33 வார்டுகளிலும் சேகரமாகும் கழிவுகளை மக்கும் குப்பை-மக்காத குப்பை என தரம் பிரித்து, உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தது. இதனிடையே,குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடப்பதால், அணிமூர் கிராமத்தில் கொசுத்தொல்லையுடன் கடும் துர்நாற்றமும் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில்,கழிவுகளோடு வீசப்படும் இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதற்காக, சிலர் குப்பைகளுக்கு தீ வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளதால் அப்பகுதியே புகை மண்டலமாகும் நிலை உள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,நவீன கழிவுநீர் மேலாண்மை திட்டத்தின் கீழ்,நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுநீரை கொட்டுவதற்கு, அப்பகுதியில் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டது. மறுசுழற்சி முறையில்  அந்த நீரை பிரித்தெடுத்து, அதனை செடி கொடிகள் மற்றும் மரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது என்றும், அடி வண்டலை உரமாக மாற்றுவது எனவும் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து,நேற்று தொட்டி கட்டும் பணிக்காக, நகராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், நாமக்கல் ஆயுதப்படை போலீசார் வஜ்ரா வாகனத்துடன் அங்கு விரைந்தனர். இதனால்,அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து,ஊர் எல்லையில் திரண்ட கிராம மக்கள்,தங்கள் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், தாசில்தார் கதிர்வேல், புறநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், நகராட்சி ஆணையர் வேலாயுதம், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ஏற்கனவே உரக்கிடங்கு அமைப்பதாக கூறி, இப்பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலை நகராட்சி மாசுபடுத்தி விட்டது.

இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, புதியதாக கழிவுநீர் தொட்டி அமைக்க கூடாது என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், புதியதாக கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முறையான அனுமதி பெற்று தொட்டி கட்டிக்கொள்ளுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால், தொட்டி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால், முற்றுகையை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்