×

இ-அடங்கல் பயிற்சிக்கு வந்த இடத்தில் இருக்கை வசதியின்றி விஏஓக்கள் அவதி

நாமக்கல், ஜூன் 21: நாமக்கல்லில் நடைபெற்ற இ-அடங்கல் பயிற்சிக்கு வந்த இடத்தில் இருக்கை வசதியின்றி அவதிக்குள்ளான விஏஓக்கள், அலுவலக வாயிலில் பல மணி நேரம் காத்திருந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 8 தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், துணை தாசில்தார்களுக்கு நேற்று நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், விவசாயிகளின் நிலம், பயிர் சாகுபடி தொடர்பான விவரங்களை இ-அடங்கல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

இதில், தமிழ்நாடு இ-ஆளுமை மென்பொறியாளர் விஜயலட்சுமி கலந்துகொண்டு, விவசாயிகள் நிலம், சாகுபடி பயிர்கள் உள்ளிட்ட விவரங்களை இ-அடங்கல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளித்தார். காலை வேளையில் 4 தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மாலை நேரத்தில் 4 தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 4 பிரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி அளிக்க நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கினை கலெக்டரின் நேர்முக உதவியாளரான பால் பிரின்ஸி ராஜ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அந்த அறையில் விஏஓக்கள் அமர தேவையான இருக்கை வசதிகளை செய்து கொடுக்க நகராட்சி அலுவலர்கள் மறுத்துவிட்டனர். இதனால், வருவாய்த்துறையினர் வாடகைக்கு சேர்களை வாங்கி வந்ததால், காலையில் பயிற்சி தொடங்க தாமதமானது.

மேலும், பயிற்சி நடைபெற்ற நகராட்சி அலுவலகத்துக்கு மாவட்டம் முழுவதும் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் வந்திருந்தனர். அவர்கள் இருக்ககூட இடம் இல்லாமல் நகராட்சி அலுவலக வாசலில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். நகராட்சி அலுவலகத்தின் மேல் மாடியில் கூட்டம் நடத்த மற்றொரு அறை இருந்தும் அந்த அறையில் கிராம நிர்வாக அலுவலர்கள் அமர கூட இடம் அளிக்க நகராட்சி அலுவலர்கள் மறுத்துவிட்டனர். குடிநீர் வசதி செய்து கொடுக்காததாலும் பயிற்சிக்கு வந்தவர்கள் அவதிக்குள்ளாகினர்.

பயிற்சி நடைபெற்ற நகராட்சி அலுவலகத்துக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸி ராஜ்குமார், நாமக்கல் சப்கலெக்டர் கிராந்தி குமார்பதி, திருச்செங்கோடு ஆர்டிஓ மணிராஜ் ஆகியோர் அவ்வப்போது வந்து பார்வையிட்டனர். ஆனால், நகராட்சி அலுவலக வாசலில் நீண்ட நேரமாக காத்திருந்த கிராம நிர்வாக அலுவலர்களை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட அலுவலர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கிராம நிர்வாக அலுவலர்களை பயிற்சிக்கு அழைத்த வந்திருந்த தாசில்தார்களும் இதை கண்டு கொள்ளவில்லை.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்