×

சிவகாசி அருகே போக்குவரத்து விதி மீறலால் விபத்து அதிகரிப்பு

சிவகாசி, ஜூன் 21:சிவகாசி அருகே போக்குவரத்து விதி மீறலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. சிவகாசி நகரில் பட்டாசு, அச்சு, மற்றும் தீப்பெட்டி தொழில்கள் பிரதானமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி நகரில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மக்கள் தொகை பெருக்கத்தால் நகர் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நகரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம், போக்குவரத்து பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் சிவகாசி நகர் பகுதியில் போக்குவரத்து வீதி மீறலால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.ஆனால் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சாலை விபத்தில் மனித உயிர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது. சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் விபத்தில் பலர் பலியாகி வருகின்றனர். சிவகாசி-சாத்தூர் சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த கிராமம் சிவகாசி-சாத்தூர் செல்லும் மெயின் சாலையில் அமைந்துள்ளதால் வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. ஆனால் இங்குள்ள சாலையில் போக்குவரத்து தடுப்புகள் எதுவும் முறையாக அமைக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பஸ் மோதியதில் சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் பலியானார். இதேபோல் அந்த கிராமத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் பலியாகி வருகின்றனர். ஆனால் இங்கு விபத்து தடுப்பு எச்சரிக்கை எதுவும் முறையாக வைக்க படவில்லை.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் இது விபத்து பகுதி வாகனங்கள் மெதுவாக செல்லவும் என்ற எச்சரிக்கை பலகை இல்லை. போக்குவரத்து தடுப்புகள் வைத்துள்ளனர். ஆனால் இந்த போர்டில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டபடவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகின்றன. இதேபோன்று சிவகாசி நகரில் பல்வேறு ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கபடவில்லை. போக்குவரதது தடுப்புகளும் அமைக்கப்படவில்லை.எனவே விபத்து ஆபாயம் உள்ள இடங்களில் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து