×

ஆண்டிபட்டி அருகே ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் சிறைபிடிப்பு

ஆண்டிபட்டி, ஜூன் 21:  ஆண்டிபட்டி அருகே உள்ள பாலசமுத்திரம்  ரேஷன் அரிசி மூட்டைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற விற்பனையாளர் மற்றும் உதவியாளரை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் பாலசமுத்திரம் கிராமம் உள்ளது. இங்கு ரேஷன் கடை (எண் 14 ) செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஜி.கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி மற்றும் பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த கடையில் விற்பனையாளராக வைரபாண்டியன் என்பவரும், எடையாளராக கருப்பையாவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த 250கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, விற்பனையாளர் வைர பாண்டியன் உதவியோடு உதவியாளர் கருப்பையா நேற்று ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது இதனைக் கண்ட வீரமணி, சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆட்டோவை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த விற்பனையாளர் மற்றும் கடை ஊழியர் மீண்டும் ரேஷன் மூட்டைகளை ரேஷன் கடையை திறந்து  கடைக்குள் வைக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்த ஆண்டிபட்டி எஸ்.ஐ பொதுமக்களை சமாதானப்படுத்தி பொருட்களை கைப்பற்றி ஆண்டிபட்டி வட்டாட்சியர்  பாலசண்முகத்திடம் ஒப்படைத்தார்.இதனை அடுத்து வட்டாட்சியர் பாலசண்முகம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரித்தார்.

 இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் வீரமணி கூறுகையில், `` இங்குள்ள ரேஷன் கடையில் தொடர்ந்து  தவறுகள் நடைபெற்று வந்தது. இதனை கண்டுபிடிப்பதற்காக நேற்று காலை தயாராக  இருந்தோம். அதே போன்று ஆட்டோவில் ரேஷன் மூட்டைகளை ஏற்றி கடத்தி கொண்டு  வந்தனர். நாங்கள், வண்டியை வழிமறித்து பிடித்து. காவல் துறை இருக்கும்,  வட்டாட்சியருக்கும் தகவல் கொடுத்தோம். மேலும் சாதாரண பொதுமக்கள் மாதத்தில்  30 கிலோ அரிசி வாங்கினால் 25 கிலோ மட்டுமே உள்ளது. இதுபோன்று மண்ணெண்ணெய்  ஒரு லிட்டருக்கு 3/4 லிட்டரும், சர்க்கரை 2 கிலோவுக்கு  1 1/2 கிலோ என்ற  அளவில் தான் உள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன்  கடைகள் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்தார். இதுகுறித்து சேகர் கூறுகையில், ``இங்குள்ள ரேஷன்  கடையில் இது போன்ற ஊழல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக முதியோருக்கு வழங்கும் 5 கிலோ அரிசி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பு எல்லாம் முதியோர் ஓய்வு தொகை வாங்கும் ஏழைகளுக்கு அரசு அரிசி வழங்கி வந்தது. ஆனால் தற்போது இல்லாததால் முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆனால் அரசு ஊழியர்கள் மூடை மூடையாக ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். ஊழியர்கள் வாழ, ஏழை, எளிய மக்கள் வறுமையில் வாழ்வதாக தெரிவித்தார்.




Tags : Abduction ,Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...