×

5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளும் ரூ.6 ஆயிரம் திட்டத்திற்கு மனு வழங்கலாம் தாசில்தார் தகவல்

கீழக்கரை, ஜூன் 21: ஐந்து ஏக்கருக்கு அதிகமாக இடம்  வைத்திருக்கும் பெரிய விவசாயிகளிடமும் மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான மனுக்கள் பெறப்படுகிறது என தாசில்தார் தெரிவித்தார். கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட கீழக்கரை, உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய பிர்காக்களுக்கு தனித்தனியே மூன்று நாள் ஜமாபந்தி நடந்து வருகிறது. முதல் நாளன்று 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய உத்திரகோசமங்கை பிர்காவுக்கு நடைபெற்ற ஜமபந்தி நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் தணிகாஜலம் தலைமை வகித்தார். கீழக்கரை தாலுகா தாசில்தார் சிக்கந்தர் பபிதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் வீரராஜா, வட்டவழங்கல் தாசில்தார் சேகு ஜலாலுதீன், உத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உத்திரகோசமங்கை பிர்காவிற்கு உட்பட்ட 7 வருவாய் கிராம மக்களிடமிருந்து பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விவசாயக்கடன், கணினி திருத்தம் பயிர் காப்பீடு போன்றவைகளுக்காக 150க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.இதுகுறித்து தாசில்தார் சிக்கந்தர் பபிதா கூறுகையில், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படும். இந்த ஜமபந்தியில் முக்கியமாக இறந்தவர்களின் பெயரில் உள்ள பட்டாக்களை அவரின் வாரிசுதாரர் பெயர்களுக்கு மாற்றி மத்திய அரசின் திட்டப்படி வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் இந்த வருடம் கீழக்கரை தாலுகாவில் 3 ஆயிரத்து 887 நபர்களுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக வழங்கும் ரூ.6 ஆயிரம் திட்டத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 5 ஏக்கருக்கு அதிகமாக இடம் வைத்திருக்கும் பெரிய விவசாயிகளுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் பெறுவதற்கான மனுக்களும் பெறப்படுகிறது.
இரண்டாவது நாள் கீழக்கரை பிர்காவிற்கு உட்பட்ட 10 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இன்று திருப்புல்லாணி பிர்காவிற்கு உட்பட்ட 9 வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


Tags : land ,Dasillar ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!