×

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய அரசுப்பேருந்துகள்

திருவாடானை, ஜூன் 21: திருவாடானையில் அரசு பேருந்துகள் மீது போஸ்டர்  ஒட்டுவதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாடானையில் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு சுமார் 200க்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் அரசு டவுன் பஸ்களை டீசல் சிக்கனத்திற்காக தேவகோட்டை பணிமனைக்கு கொண்டு செல்லாமல் இந்த பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கின்றனர். இப்படி நிறுத்தி வைக்கும் பேருந்துகள் மீது திருமண போஸ்டர்களையும் கட்சி போஸ்டர்களையும் ஒட்டி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுனர்கள் கூறுகையில், இரவு நேரத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு காலையில் வந்து எடுக்க வரும்போது சுற்றிலும் போஸ்டர்களை ஒட்டி சென்றுவிடுகின்றனர். அவற்றை கிழித்து எறிந்து விட்டு தான் நாங்கள் செல்ல வேண்டியுள்ளது. தினமும் இப்படி செய்வதால் உரிய நேரத்திற்கு பேருந்தை இயக்க முடியவில்லை. பேருந்தில் போஸ்டர் ஒட்டுவது சட்டவிரோதம் என தெரிந்திருந்தும் திரும்பத் திரும்ப இந்த செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை