×

மாவட்டம் மனு தாக்கல் செய்ய விடாமல் அலைக்கழிப்பு மத்திய கூட்டுறவு வங்கி முற்றுகை

மதுரை, ஜூன் 21: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மொத்தம் 21 இயக்குநர் பதவி உள்ளது. இப்பதவிக்கு மதுரை, தேனி உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 44 கிளைகளுக்கு கீழ் இயங்கும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கி, மற்றும் அரசு அலுவலக பணியாளர் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு வங்கியில் தேர்வான தலைவர்கள் போட்டியிடலாம். இந்த இயக்குநர் பதவிகள் பல்வேறு ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்படும். இந்த வங்கியின் 21 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரியாக சதிஷ்குமார் இருந்தார். காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனு பெறப்பட வேண்டும். ஆனால், மாவட்டத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கியின் தலைவர்களான அதிமுகவினர் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இவர்கள் மதியம் 2 மணிக்குள் மனு தாக்கல் செய்து முடித்தனர். தேர்தல் அதிகாரி 2 மணிக்கு மேல் வெளியே சென்றுவிட்டார். அரசு பணியாளர் கூட்டுறவு சங்கத்திற்கான ஒரு இயக்குநர் பதவிக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்ய வணிகவரித் துறை சிக்கண நாணயச் சங்கத் தலைவர் சித்திரை வந்தார். தேர்தல் அதிகாரி வெளியே சென்று விட்டார். தேவையானால், இணைப்பதிவாளர். துணை பதிவாளரிடம் மனு தாக்கல் செய்யுங்கள் என கூறி அவரை அலைக்கழித்தனர். மேலும், வேட்பு மனு தாக்கல் நடந்த மாடியில் அதிமுகவினர் சுற்றி உட்கார்ந்து கொண்டு வேறு யாரையும் மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்தனர்.  2 மணி நேரத்திற்கு மேல் சித்திரை மனு தாக்கல் செய்யா முடியாமல் தவித்ததால், இதுதொடர்பாக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்டத் தலைவர்  ஜெயராஜ ராஜேஸ்வரன், மாவட்டச் செயலாளர் .நீதிராஜா, மாவட்ட நிர்வாகி பாலாஜி  உட்பட ஏராளமானோர் திரண்டு தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்.

பிற்பகல் இரண்டு மணிக்கு சென்ற தேர்தல் அதிகாரி வரவேயில்லை. முற்றுகை போராட்டம் நடைபெறுவதை அறிந்த தேர்தல் அதிகாரி  மாலை 4,40 மணிக்கு வந்துள்ளார். இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக சித்திரையின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் சீட்டு வழங்கினார். மொத்தம் 33 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது.  இதுதொடர்பாக அரசு ஊழியர் சங்க செயலாளர் நீதிராஜா கூறுகையில்,‘அரசு ஊழியர் சங்கங்களுக்கு என ஒரு பதவி உள்ளது. அதை திட்டமிட்டு மறைத்து, ஆளுங்கட்சியினர் அபகரிக்க முயன்றுள்ளனர். அரசு ஊழியர்களுக்கான இடஒதுக்கீடு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கத்திற்கு மட்டுமே கிடைக்க வேண்டும். அப்போதுதான், இந்த வங்கியின் மூலம் அரசு ஊழியர்கள் தங்களது சலுகை, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்’ என்றார். இதுதவிர நேற்று நடந்த மனு தாக்கலின்போது, மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது வழங்கப்படவில்லை. மனுத்தாக்கல் செய்தவர்களில் சிலர் ரசீது வழங்கும்படி கேட்டனர். இதனாலும் வாக்குவாதம் ஏற்பட்டது.

      

Tags : Central Bank ,Cooperative Bank ,filing ,
× RELATED ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித்...