பண்ருட்டி அருகே தொடரும் அவலம் குடிநீரை தேடி அலையும் மாணவர்கள்

பண்ருட்டி, ஜூன் 21: பண்ருட்டி அருகே சூரகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடிநீரின்றி பரிதவித்து வருகின்றனர். பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெயில் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான போர்வெல்கள் தண்ணீர் இன்றி உள்வாங்கி உள்ளது. விவசாய பயிர்கள் காய்ந்து வருகின்றன. ஒருசில கிராமங்களில் குடிநீருக்காக பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.  பண்ருட்டி அருகே விசூரில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்காக இங்குள்ள வெள்ளவாரி ஓடை ஆற்றின் அருகில் புதிய போர்வெல் போடப்பட்டது. போர்வெல் அமைத்த நாள் முதல் காலை, மாலை இருவேளைகளிலும் தண்ணீர் தேவையான அளவில் பிடித்தது போக மீதி தண்ணீர் வீணாக ஓடையில் கலக்கிறது. ஆனால் இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. சிறிய பிளாஸ்டிக் குடிநீர் டேங்க் அமைத்துகூட இதனை சேமித்து வைக்கலாம். ஆனால் எவ்வித நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இதற்கு நேர்மாறாக பண்ருட்டி அருகே சூரகுப்பத்தில் பள்ளி மாணவர்கள் தண்ணீரை தேடி அலையும் அவலநிலை உள்ளது.

சூரகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் குடிநீர் தேவைக்காக ஊராட்சி குடிநீர் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல்ேவறு காரணங்களால் இப்பள்ளிக்கு தண்ணீர் வராததால், அருகில் உள்ள கரும்பு வயல் வாய்க்காலில் வரும் தண்ணீரை எடுத்து பருகி வருகின்றனர். சுகாதார வளாகம் தண்ணீர் இன்றி அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் காணப்படுகிறது. மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் அருகில் உள்ள கோயில் குடிநீர் தொட்டியில் உள்ள நீரை பயன்படுத்தி  தட்டுகளை கழுவுகின்றனர். சத்துணவு பொறுப்பாளர்கள் சமையல் பாத்திரங்களை விவசாய நிலத்திற்கு சென்று தினந்தோறும் கழுவி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்கள் இந்த அவலநிலையை சந்திக்கின்றனர். இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பிடிஓக்கள் நேரில் சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: