விழுப்புரம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து: பாட்டி, பேத்தி பலி

விழுப்புரம், ஜூன் 21: விழுப்புரம் அருகே நேற்று காலை அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியதில் பாட்டி, பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம் அருகே புருஷானூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35), பெயிண்டர். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதனிடையே கார்த்திகேயன் தாயார் நாவம்மாளின் சகோதரி குச்சிப்பாளையம் அரசு மருத்துவமனையில் கண் ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று காலை நாவம்மாள், அவரது பேத்தி நந்தினி ஆகியோர் குணராஜ் (30) என்பவருடன் பைக்கில் குச்சிப்பாளையம் நோக்கி சென்று ெகாண்டிருந்தனர். பஞ்சமாதேவி என்ற இடம் அருகே அவர்கள் சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி.  பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த 3 பேரும் சாலையில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது, நாவம்மாள், நந்தினி மீது லாரியின் முன்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். பைக்கை ஓட்டிச் சென்ற குணராஜ் படுகாயம் அடைந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றுவிட்டது.

இதுகுறித்து தகவலறிந்த நாவம்மாளின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்துக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வளவனூர் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதற்கிடையே ஒருசிலர் விபத்து ஏற்படுத்திய லாரியை பைக்கில் பின்தொடர்ந்தனர். கடலூர் மாவட்டம் மாளிகைமேடு என்ற இடத்தில் அவர்கள் லாரியை மடக்கினர். இருப்பினும் லாரியை அப்படியே விட்டு விட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார். அரை மணி நேரமாக போராட்டம் நீடித்த நிலையில் லாரி டிரைவரை கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.விபத்தில் படுகாயம் அடைந்த குணராஜ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாவம்மாள், நந்தினி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். விபத்து மற்றும் சாலை மறியல் காரணமாக விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related Stories: