சுரண்டையில் உருக்குலைந்த சாலையால் கல்லூரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்

சுரண்டை, ஜூன் 21: சுரண்டையில் காமராஜர் அரசு கல்லூரிக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளதால் கல்லூரியை அரசு பஸ்கள் புறக்கணிக்கின்றன. இதனால் ஆனைகுளம் ரோட்டில் இறக்கிவிடப்படும் மாணவ, மாணவிகள் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு கல்லூரிக்கு நடந்துசெல்லும் அவலம் தொடர்கிறது. சுரண்டையில் இருந்து ஆனைகுளம் செல்லும் ரோட்டில் கடந்த 2007ம் ஆண்டில் துவங்கப்பட்ட காமராஜர் அரசு கல்லூரி, சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதி இல்லாமல் தத்தளித்து வருகிறது. காலை, மாலை என இருவேளை இயங்கிவரும் இந்த கல்லூரியில் சுரண்டை சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் நலன்கருதி இயக்கப்பட்ட அரசு பஸ்கள், முன்ெபல்லாம் கல்லூரி வளாகம் வரை சென்றுவந்தன. இதனிடையே ஆனைகுளம் ரோட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி தற்போது மிகவும் உருக்குலைந்துள்ளது. ஒரு சில இடங்களில் 3 மீட்டராக சுருங்கியுள்ளது. இதை காரணம் காட்டி அரசு பஸ்கள் கல்லூரியை புறக்கணிக்கும் வகையில் ஆனைகுளம் ரோட்டிலேயே இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் தினமும் 1  கி.மீ. தொலைவு  நடந்துசென்று கல்வி கற்கும் நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

 காலை நேர வகுப்பிற்கு அவசரமாக புறப்படும் போது ஒரு சில மாணவிகள் சாப்பிடாமல் வருவதால் நடக்கமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, இனியாவது உருக்குலைந்த சாலையை சீரமைப்பதோடு பஸ்கள் கல்லூரி வரை சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். தேவையான அளவுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: