திருச்செந்தூரில் வியாபாரிகள் சங்க கூட்டம்

உடன்குடி, ஜூன் 21: வணிகர் நல வாரியம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள்  சங்க பேரவை வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு  வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், திருச்செந்தூரில் பனைத்தொழில்  மற்றும் பயிர்த்தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைக்  கூட்டம் நடந்தது. மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை  வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மாநில  பொதுச்செயலாளர் திருப்பூர் வரதராஜன் வரவேற்றார். கூட்டத்தில்  தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று  தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு பட்டப்படிப்பு வரை  இலவச கல்வி வழங்க வேண்டும்.

நெல் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களை அரசு  இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி, நெல்லை  மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும். பாரம்பரிய  மிக்க தொழிலான பனைத்தொழிலையும், பனை மரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். பனைத்தொழில் அல்லாத காலங்களில் பனைத்தொழிலாளர்களுக்கு அரசு  உதவித்தொகை வழங்க வேண்டும். 24 மணி நேரமும் கடை திறக்க கொடுக்கப்பட்ட  நிபந்தனைகளை தளர்த்தி சிறுவியாபாரிகளும் பயன்பெற நடவடிக்கை எடுக்க  வேண்டும். வணிகர் நல வாரியம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில்  மாநில இளைஞரணி செயலாளர் அசோக்குமார், பனைத்தொழில் ஆர்வலர் பால்பாண்டியன்,  நெல்லை மாவட்ட தலைவர் பொன்பெருமாள், திருச்சி மாவட்ட தலைவர் ரவி மற்றும்  ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் பொன்னுசாமி  நன்றி கூறினார்.

Related Stories: