2 வாரமாக குடிநீர் வழங்காததை கண்டித்து யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

கோவில்பட்டி, ஜூன் 21: கோவில்பட்டி அருகே கெச்சிலாபுரத்தில் கடந்த 2 வாரமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள், யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே கிளவிபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கெச்சிலாபுரம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக இக்கிராம மக்களுக்கு சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு குடம் ரூ.5 மற்றும் ரூ.10க்கு விலைக்கு வாங்கி கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இக்கிராமத்தில் உள்ள அடிபம்புகள் பழுதாகி நீண்ட காலமாகியும் இதுவரையில் சரிசெய்யப்படாமல் உள்ளதால், இவைகள் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது.

இதையடுத்து கெச்சிலாபுரம் கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதான அடிபம்புகளை சீரமைக்கவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் போடப்பட்டுள்ள 2 ஆழ்குழாய் கிணறுகளை தங்களது கிராமத்தில் ஒப்படைக்கவும் வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு சென்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) முருகானந்தத்திடம் வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: