வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து விளாத்திகுளத்தில் காத்திருப்பு போராட்டம்

விளத்திகுளம், ஜூன் 21: பொதுமக்களிடம் அவதூறாக பேசிய பிடிஓவை கண்டித்து விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரபாண்டியபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இயந்திரம் பயன்படுத்தி வேலை நடந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கடந்த 3ம் தேதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விளாத்திகுளம் பிடிஓ அரவிந்தன் குளத்தூர் காவல் நிலைய அதிகாரி ஒருவரை அழைத்துச் சென்று பொதுமக்களிடம் அவதூறாக பேசி மிரட்டியுள்ளார். இந்நிலையில் விளாத்திகுளம் பிடிஓ அரவிந்தன் மற்றும் நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மேலும் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள சீவலப்பேரி குடிநீரை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வீரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு சீவலப்பேரி குடிநீர் வழங்காததால் சுகாதாரமற்ற கண்மாய் குடிநீரை பிடித்து குடிக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் பத்மநாபன் பிள்ளை, ஏபிடிஓ காசிராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிடிஓ அரவிந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டதால், 100 நாள் பணித்தள பொறுப்பாளரையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 100 நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு தடையில்லாத குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடந்த காத்திருக்கும் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகராஜ், விளாத்திகுளம் சிபிஎம் தாலுகா செயலாளர் புவிராஜ் மற்றும் ராமலிங்கம், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: