×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ₹7.73 கோடி மதிப்பில் பணிகள்

கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ₹7.73 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், நகராட்சி, ஊராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம்  ₹7 கோடியே 73 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் 197 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவற்றில் ஓசூர் நகராட்சிக்கு ₹1 கோடியே 58 லட்சம் மதிப்பில் 21 பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்தல், மோட்டார் பேனல் போர்டு வைத்தல், ஊராட்சி பகுதிகளுக்கு 174 பணிகள் ₹5 கோடியே 36 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒன்றிய பொது நிதி, ஊராட்சி பொது நிதி மற்றும் உபரி நிதியிலிருந்து, புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், புதிய மின்மோட்டார் மற்றும் பேனல் போர்டு அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், ₹85 லட்சம் மதிப்பில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கூரம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆற்றுப்படுகையில் நீர் உறுஞ்சும் கிணறு ₹20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. முத்துராயன் கொட்டாய் கூட்டு குடிநீர் பணிகளுக்காக ₹65 லட்சம் மதிப்பில் நீர் உறுஞ்சும் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : drinking water shortage ,Krishnagiri district ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...