×

சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக டிரைவரிடம் பண மோசடி

கிருஷ்ணகிரி, ஜூன் 21:  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், சத்துணவு துறையில் ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஓட்ட அனுமதி பெற்று தருவதாக கூறி, மினி லாரி டிரைவரிடம் பணம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பர்கூர் அருகே, கந்திகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சூசையப்பன்(40). இவர் சொந்தமாக மினி லாரி ஓட்டி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த சமையல் மாஸ்டர் டோம்னிக்(63).

கடந்த சில தினங்களுக்கு முன், டோம்னிக் மூலம் சூசையப்பனை சந்தித்த நபர், சத்துணவுத்துறை மூலம் வாடகைக்கு வாகனம் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும், நாள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, சத்துணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு பூசாரிப்பட்டி, வரட்டனப்பள்ளி, கந்திகுப்பம் பகுதியில் உள்ள சத்துணவு மையங்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு, ₹1320 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய சூசையப்பன், அந்த ஒப்பந்தத்தை தனக்கு வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அதற்கான போலி ஒப்பந்தம் தயார் செய்த மர்மநபர், சூசையப்பனிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, நேற்று காலை 10.50 மணிக்கு மினிலாரியுடன் சூசையப்பன், டோம்னிக் ஆகியோரை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சத்துணவு பிரிவில் டீசலுக்கான படிவம் வாங்கி வர வேண்டும். அதற்காக ₹15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என வாங்கி கொண்டு, அலுவலகத்திற்கு உள்ளே சென்றவர் மீண்டும் வரவில்லை.

நீண்ட நேரமாக காத்திருந்தவர்களிடம், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் சூசையப்பனை ஏமாற்றி, நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தை  சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்திற்குள்ளேயே மோசடி நடந்தும், அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு