×

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் கரூர் மாவட்டத்தில் குடிநீருக்காக அலைந்து திரியும் கிராமமக்கள்

கரூர், ஜூன் 21: கரூர் மாவட்டம் சேங்கல் அடுத்துள்ள சுக்காம்பட்டி புதூர் பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்கான குடிநீர் சரிவர கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து சேங்கல் செல்லும் வழியில் சுக்காம்பட்டி புதூர் பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளனர். பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் கூலித்தொழில்கள் போன்றவற்றை செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு இந்த பகுதியையும் வாட்டி வதக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் 30 ஆயிரம் லிட்டர், 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டிகள் உள்ளன. மேலும், ஒரு சின்டெக்ஸ் டேங்கும் உள்ளது. ஆனால், எதிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மாலை நேரங்களில் தண்ணீர் தேடி பல கிராமங்களுக்கு இந்த பகுதியினர் அலைந்து திரிந்து வருகின்றனர்.

இந்த பகுதிக்கு அடுத்து 3கிமீ தூரத்தில் உள்ள கீழடை பகுதியில் இருந்து சில மாதங்கள் தண்ணீர் சப்ளை வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது, அதுவும் சரிவர கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் பகுதி மக்கள் கூறுகின்றனர். தேர்தல் பணிகள் முடிவடைந்த பிறகு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், அந்த பணியும் நடைபெறாத காரணத்தினால் தண்ணீருக்காக பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பும் விசயத்திலும் பகுதி மக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, புதிதாக போர்வெல் அமைத்து, இங்குள்ள மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி மக்களுக்கு சப்ளை செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். மேலும் உப்பு தண்ணீருக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் கேட்டு இந்த பகுதி புகார் தெரிவிக்கும் சமயங்களில் எல்லாம், அந்த சமயத்துக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்கி பிரச்னையை முடித்து விட்டு செல்வதால், எங்கள் பகுதிக்கு, தற்காலிக தீர்வு தேவையில்லை எனவும், நிரந்தர தீர்வு மட்டுமே எங்களுக்கு தேவை என ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றனர் இந்த பகுதி மக்கள்.

இது குறித்து இந்த பகுதியினர் தெரிவித்துள்ளதாவது:
மாரியாயி: வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமே, குடிநீர்தான். ஆனால், எங்களுக்கு மட்டும் குடிநீர் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. தண்ணீருக்காக அலைந்து திரிய வேண்டியுள்ளது. இதனால், பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு சீரான முறையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மகாலட்சுமி: எங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் எங்கள் ஊர்மக்களுக்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு சீரான முறையில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

பழனியம்மாள்: போர்வெல் அமைத்து தந்து, தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, மற்ற வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே, எங்கள் பகுதிக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் தண்ணீர் முறையாக வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சித்ரா: எங்கள் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது நிலவும் தண்ணீர் பிரச்னை காரணமாக அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். குடும்ப தேவைக்கு ஏற்ப, தண்ணீர் வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்பதால் எங்களின் முக்கிய தேவையான தண்ணீர் பிரச்னையை தீர்க்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : district ,Karur ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்