×

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தும் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து கலெக்டர் பேச்சு

கரூர், ஜூன் 21: தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தும் என்று கரூரில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசிய கலெக்டர் கூறினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளை கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகன் துவக்கி வைத்தார்.

கலெக்டர் பேசியது:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது பெரிய வாய்ப்பு. வாழ்க்கையில் கடந்து விட்ட காலங்கள் திரும்ப வராது. உங்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பினை முறையாக பயன்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும். உங்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் இலக்கை நோக்கி மட்டுமே ஒருமுகப்படுத்தி ஒரு தவ வாழ்க்கைபோல தேர்வுக்கு இடைப்பட்ட இந்த மூன்று மாத காலத்தை பயன்படுத்தி கொண்டால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் இதுபோன்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது என்ற மாயைக்குள் மாட்டிக் கொள்ளாமல் பெரும்பான்மையான வெற்றியாளர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வெள்ளை என்பது நிறம் அழகல்ல. ஆங்கிலம் என்பது மொழி. அறிவல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஒருவரை தன்னம்பிக்கையும், விடா முயற்சியுமே வாழ்க்கையில் உயர்த்தும் என்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுப்புலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,workshop ,one ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...