×

பள்ளி செல்லும் குழந்தைகளும் பாதிப்பு காரைக்காலில் கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்கு தாராளமாக கடனுதவி அளிக்கலாம் கலெக்டர் அறிவுறுத்தல்

காரைக்கால், ஜூன் 21: காரைக்காலில் கால்நடை வளர்ப்பு ஆர்வலர்களுக்கு தாராளமாக கடனுதவி அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார். காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை, மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தொடங்கி வைத்து பேசியது:

காரைக்கால் மாவட்டம் நெல், பருத்தி, தோட்டப் பயிர் போன்ற விவசாயம், கால்நடை வளர்ப்பையும், மீன்பிடித் தொழிலையும் முக்கியமாக கொண்டுள்ளது. காரைக்கால் மக்களுக்கு வங்கிகள் செய்யும் சேவை பாராட்டுக்குரியது. புதுச்சேரி அரசு சார்பில் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, வேளாண்மை பெருக்கத்துக்கு ஏற்ற ஆலோசனைகள், திட்ட உதவிகள் அந்தந்த துறையின் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

வங்கிகள் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் கடனுதவியை அளிக்கின்றன. எந்தெந்த திட்டங்களில் மக்கள் கடனுதவி பெறலாமென்ற விழிப்புணர்வை வங்கிகள் ஏற்படுத்துவதோடு, கால்நடைகள் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு உரிய திட்டங்களின் மூலம் தாராளமாக கடனுதவி அளிக்க வங்கிகள் முன்வரவேண்டும். கால்நடைகள் வளர்ப்பு பலருக்கு வாழ்வாதாரமாக இருப்பதால், இதன் மீது வங்கிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், அரசு சார்ந்த திட்டங்கள், பிரதமரின் திட்டங்கள் குறித்து அரசுத்துறையினருக்கு விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர் தர்ஷ், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் பி.மலைக்கனி மற்றும் வேளாண் துறை, வட்டார வளர்ச்சி, கால்நடைத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்