×

தென்மேற்கு பருவமழை காலத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் தயாராக இருப்பது அவசியம்

பெரம்பலூர், ஜூன் 21: பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. டிஆர்ஓ அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சீனிவாசன், ஆர்டிஓ விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் சாந்தா தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ளதையடுத்து அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கோட்ட மற்றும் வட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு கடந்த காலங்களில் பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும் அப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அறிந்து கொள்வதுடன் அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை குறித்து திட்டமிடல் வேண்டும்.  

வெள்ளம் பாதிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் முதல் செயற்பாட்டாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் வழங்க வேண்டும். தென்மேற்கு பருவமழை காலத்தில் பேரிடர் எதுவும் ஏற்படும்பட்சத்தில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக சமுதாய கூடங்கள், பள்ளி கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான முறையான திட்டத்துடன் அவர்களை தயார் செய்து அதன்படி விரைவாக செயல்படுவது இன்றியமையாததாகும். தற்போதைய சூழலில் அனைத்துத்துறை அலுவலர்களும் பேரிடர் மேலாண்மை முக்கியத்துவத்தை உணர்ந்து விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமங்களுக்கு செல்கிற பேருந்துகளில் மக்களின் பார்வையில் படுமாறு ஸ்டிக்கர்கள் தயார் செய்து ஒட்ட வேண்டும். மழை காலங்களில் மின்சாரத்தின் வாயிலாக உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பலவீனமான மின்மாற்றிகள், மின் கம்பங்கள் மற்றும் தாழ்வான மின் கம்பிகளை கண்டறிந்து அவற்றை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும்.

மழை காலங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு கட்டிடத்தின் உறுதி தன்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். தென்மேற்கு பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும்பட்சத்தில் அவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அனைத்துத்துறை அலுலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் மற்றும் அனைத்து வட்டார தாசில்தார்கள், ஒன்றிய ஆணையர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Southwest Monsoon ,
× RELATED ‘குளு குளு அறிவிப்பு’.. கொளுத்தும்...