×

கலெக்டர் அலுவலகம் அருகே கேந்திர வித்யாலயா பள்ளி கட்டுமான பணி ஆய்வு.

பெரம்பலூர், ஜூன் 21: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்து வரும் இறுதிக்கட்ட கட்டிட கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்து வரும் இறுதிக்கட்ட கட்டுமான பணியை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த திமுக ஆட்சியில் 2010ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் முயற்சியால் கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டு வரப்பட்டு அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால் பழைய ஆர்டிஓ கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளிக்கான சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதவாறு பெரம்பலூர் மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களால் மிகமிக அதிகப்பட்சமாக திறட்டப்பட்ட ரூ.85 லட்சம் நிதியை கொண்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா நிறுவனத்துக்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்கப்பட்டது.

இந்த 5 ஏக்கர் நிலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்காக ரூ.14.77 கோடி நிதி, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு 28,500 சதுர அடி பரப்பளவில் 24 வகுப்பறை, 3,300 சதுர அடி பரப்பளவில் ஆசிரியர்களுக்கான 9 குடியிருப்பு, 4,400 சதுர அடி பரப்பளவில் 6 ஆய்வகங்களுக்கான அறைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

இன்று (21ம் தேதி) இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார். அப்போது நடப்பு கல்வியாண்டிலேயே கேந்திர வித்யாலயா பள்ளி வகுப்புகள் இந்த புதிய கட்டிடத்தில் துவங்கி நடைபெறும் என்று உறுதியளித்தார். ஆய்வின்போது கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன், மத்திய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுந்தரம், இளநிலை பொறியாளர் கருப்பசாமி பாண்டியன் உடனிருந்தனர்.

Tags : Kendra Vidyalaya School ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...