×

குடிநீர் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர்கள் பேசும் நிைலயில் அம்மா குடிநீர் விநியோகம் முற்றிலும் முடக்கம்

திருவண்ணாமலை, ஜூன் 21: குடிநீர் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர்கள் பேசிவரும் நிலையில், அரசு விற்பனை செய்யும் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் பெரும்பாலான இடங்களில் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. காலி குடங்களுடன் மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கின்றனர். குடிநீர் ஆதாரங்களாக அமைந்துள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டதால், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயலிழக்க தொடங்கிவிட்டது. ஆனாலும், தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இல்லை, குடிநீர் பிரச்னை என சொல்வது வதந்தி என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ போன்றவர்கள் பேசி வருகின்றனர். அதனால், மக்கள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

பருவமழை பொய்த்து, இயற்கை கைவிட்ட நிலையில், நீர் மேலாண்மையை முறையாக நிர்வகிக்காமல், அரசு நிர்வாகம் செயலிழந்ததுதான், இந்த அளவு குடிநீர் தட்டுப்பாடு மக்களை பாதித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நேரடியாக தமிழக அரசு நடத்தும் அம்மா குடிநீர் திட்டமும் தற்போது செயலிழந்திருப்பது, குடிநீர் பிரச்னையை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்திருக்கிறது.
மேலும், குடிநீர் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர்களும், அரசு தரப்பும் சொல்வது எந்த அளவுக்கு பொய்யானது என்பதற்கு, அம்மா குடிநீர் விநியோகம் முடங்கியிருப்பது சாட்சியாக இருக்கிறது.
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா, பெட்டிக்குப்பம் பகுதியில் தொடங்கப்பட்ட அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தில், நாெளான்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யும் நிலையில் இருந்தது. தற்போது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் கூட அங்கிருந்து விநியோகம் செய்ய முடியவில்லை.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திற்கான அம்மா குடிநீர் விநியோகம் முற்றிலுமாக முடங்கிவிட்டது. திருவண்ணாமலை பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன தண்ணீர் பாட்டில் உற்பத்தியும், விற்பனையும் மட்டும் குறையாத நிலையில், அம்மா குடிநீர் விநியோகத்தை அரசு கைவிட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவசர, அத்தியாவசிய மற்றும் நெருக்கடி காலங்களில் கைகொடுப்பதுதான் அரசுத்துறைகளின் சேவை. தனியார் தண்ணீர் கேன் விற்பனை நிறுவனங்களால் குடிநீர் பாட்டில்களை தடையின்றி வழங்க முடியும் என்ற நிலையில், நெருக்கடி காலத்தில் அரசு தரப்பிலான அம்மா குடிநீர் விநியோகத்தை முடக்கியிருப்பது திட்டமிட்ட மக்கள் விரோத செயல் என பொதுமக்கள் குமுறுகின்றனர்.

Tags : minister ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...