×

ஆவல்சின்னாம்பாளையத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

பொள்ளாச்சி, ஜூன் 21: பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள சில கிராமங்களில் உள்ள நீரூற்று நிலையத்திலிருந்து மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயானது, ஆங்காங்கே  உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாவது தொடர்ந்துள்ளது.  இந்நிலையில் நேற்று வால்பாறை ரோடு ஆவல்சின்னாம்பாளையத்தில் உள்ள அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர்  திட்ட  நீரூந்து நிலையத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும் ஒரு பகுதி பிரதான குழாயானது திடீர் என உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து குடிநீர் கசிய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல குடிநீர் அதிகளவு விரயமாக துவங்கியது. பின் சிறிது நேரத்தில் பிரதான குழாயின் பெரும் பகுதி உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியது. இருப்பினும், நீரூந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால், உடைப்பட்ட குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறி ரோட்டின் பெரும்பகுதியில் ஆறுபோல் ஓடியது. மேலும், உடைபட்ட குழாயை உடனே பழுது பார்க்காமல் கிடப்பில் போடப்பட்டதால், குறிப்பிட்ட மணிநேரத்தில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணான அவலம் ஏற்பட்டது.

 இந்த நீரூந்து நிலையத்திலிருந்து கிராமத்துக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குழாயை சரிசெய்ய, வால்வை திறந்து தண்ணீரை வெளியேற்றியதாக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் ஒருவர் தெரிவித்தார். ஆனால், அடிக்கடி இப்பகுதியில் ஏற்படும் குழாய் உடைப்பை முறையாக சீர்படுத்தாமல் சில நாட்காளக கிடப்பில் போட்டுவிடுகின்றனர். மேலும், குடிநீர் பற்றாக்குறையுள்ள இந்நேரத்தில் பிரதான குழாயிலிருந்து குடிநீர் அதிகளவு வெளியேறுவதை பார்க்கும் பொதுமக்கள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமத்தின் பல இடங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, குடிநீர் பற்றாக்குறையை போக்க உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சிய போக்கில் உள்ளனர்.  அதிலும், பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் உள்ள நீரூந்து நிலையத்திலிருந்து பிற கிராமத்துக்கு செல்லும் பிரதான குழாயானது அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. ஆனால், அதனை மேலோட்டமாக பழுது பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். தற்போது மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான தண்ணீர் விரயமானது வேதனையை ஏற்படுத்துகிறது.    குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், குழாய் உடைப்பை சரிசெய்யாமல் மெத்தனபோக்கில் இருந்துள்ளனர். இப்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சய போக்கில இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.’ என்றனர்.

Tags : Avalinninampalayam ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு