×

பொள்ளாச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் 24 பவுன் நகை கொள்ளை

பொள்ளாச்சி, ஜூன் 21: பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் வசிப்பவர் முகம்மது ஹனிபா (48), பெயிண்டிங் கான்ட்ராக்டர். இவர் நேற்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரது மகன் முகம்மது ஆசிக் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் முகம்மது ஆசிக் மதியம் வெளியே சென்று விட்டு பின் வீடு திரும்பிள்ளார்.அப்போது வீட்டின் முன் கதவு உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். முகம்மது ஹனிபா வீட்டுக்குள்ளே சென்று பார்க்கும் போது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது, பீரோவை திறந்து பார்க்கும்போது அதிலிருந்த 16 பவுன் நகையை காணாமல் திகைத்தார். இதுகுறித்து கிழக்கு ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

 அதே பகுதியில் வசிக்கும் நஞ்சப்பன்( 66) என்பவர் நேற்று காலையில் கோயிலுக்கு சென்று உள்ளார். அவரது மனைவி புனிதவல்லி(55) மாக்கினாம்பட்டியில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் நஞ்சப்பன் மாலையில் வீடு திரும்பிய போது, கதவு உடைந்து இருந்தவுடன் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், அதே பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி ஊழியர் முபாரக் அலி (55) என்பவர் வீட்டின் முன் பகுதி கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. மாலையில் வந்து பார்க்கும்போது பீரோவில் இருந்த ரூ. 20 ஆயிரத்தை காணவில்லை. இதையடுத்து, அடுத்தடுத்து கொள்ளை நடந்த வீட்டிற்கு கிழக்கு போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி வால்பாறை ரோடு தொழில்பேட்டை பகுதியில் வசிப்பவர் ஞானசேகரன்(48). இவரும் இவரது மனைவியும் சமத்தூரில் உள்ளஅரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று காலையில் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று உள்ளனர். பின்மதியம் இருவரும் வீட்டிற்கு வந்து உள்ளனர். அப்போது வீட்டின் கதவு  உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கே பொருட்கள் சிதறிக்கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சியில் மூன்று வீடுகளிலும், கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலும் ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனால் அப்பகுதிமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags : homes ,Pollachi ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை