×

விவசாயிகள் குறைதீர் கூட்டம் திடீர் ரத்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம், ஜூன் 21:   கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு திடீரென ரத்து செய்யப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.     திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட அளவில் 60க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் இருந்து வருகின்றன. வட்டார அளவிலான கிராம விவசாயிகளுக்கு மாதம் ஒருமுறை தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதேபோல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் தனியாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கோட்ட அளவிலான விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என கடந்த 17ம் தேதியே விவசாய சங்கங்களுக்கு கடிதமும் தகவலும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து விவசாயிகளின் முக்கிய பிரச்னைகளாக இருந்து வரும்  விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டம்,  பாசன நீர் பிரச்னை, அணைகள் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கிடப்பது, அறிவிக்கப்படாத திடீர் மின் வெட்டு என பல்வேறு பிரச்னைகள் குறித்து குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் முறையீடு செய்ய மனுக்களுடன் விவசாயிகள் தயார் நிலையில் காத்திருந்தனர்.    
இந்நிலையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் நடைபெறுவதாலும், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் கணக்கெடுக்கும் பணிக்காக அலுவலக அதிகாரிகள் சென்று விட்டதாலும், வேறொரு நாளில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொறுப்பு அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறினர்.  இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நான்கு ஆண்டுகளுக்குப் பின் முதன் முறையாக நடக்க இருந்த கோட்ட அளவிலான குறைதீர்ப்பு கூட்டத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஒத்தி வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டனர். கோட்ட அளவிலான குறை தீர்ப்பு கூட்டம் வாயிலாக முக்கிய பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, பல மணிநேரம் தாங்கள் காத்திருந்ததாகவும் இறுதியில் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.  பல்வேறு விவசாய வேலை பணிகளுக்கிடையே வந்திருக்கும் தங்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வது தங்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறி சார் ஆட்சியர் அலுவலக பொறுப்பு அதிகாரியை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு,  வாக்குவாதம் செய்தனர்.  இனிவரும் காலங்களில் வேறு பணிகளை காரணம் காட்டி குறைதீர்ப்பு  கூட்டத்தை ரத்து செய்யக்கூடாது. விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமடுத்து அதிகாரிகள் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் பலன் இல்லாததை உணர்ந்த விவசாயிகள் அனைவரும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து  கலைந்து சென்றனர்.

Tags : cancellation ,meeting ,
× RELATED பெண்களுக்கு எதிரான கொடுமைகளை...