×

அரிமளம், திருமயம் பகுதி விவசாயிகள் வேதனை வறட்சியை தாங்கும் தைல மரங்களே கருகியது நிலத்தடி நீர், காற்றில் ஈரப்பதம் முற்றிலும் குறைந்ததற்கு அறிகுறி

திருமயம், ஜூன் 21: அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள வறட்சியை தாங்க கூடிய தைல மரங்களே கருகுவது வறட்சியின் உச்சம் என விவசாயிகளும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு தைல மரங்கள் பயிரிடப்படும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. இம்மாவட்டத்தில் குறிப்பாக அரிமளம், திருமயம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தைல மரங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இந்த காடு மூலம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாலும், தைல மரத்தில் தீமைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாததாலும் அப்போது அரசு தைல மரத்தினை பயிரிடும்போது மக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லை.

இதனால் பல மரங்கள் சூழ்ந்து இருந்த அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள காடுகளை அழித்து அதன் மூலம் வியாபார நோக்கத்திற்காக தைல மரங்கள் நடப்பட்டு வருகிறது. முதலில் மரங்களை நடவு செய்த அரசு காடுகளுக்குள் விழும் மழை நீரை வெளியே செல்லாமல் தடுக்க பல நூறு கிலோ மீட்டருக்கு வாய்க்கால், மணல் தடுப்பு அமைத்து காட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு மழை செல்வதை தடுத்து நிறுத்தியது. இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டு போக ஆரம்பித்தது.

இது ஒருபுறம் இருக்க தைல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் தைல மர காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் வறட்சியான காற்று வீசும் நிலையில் நிலத்தடி நீரும் அதல பாதாளத்தில் சென்றுவிட்டதாக விவசாயிகள் குமுறுகின்றனர். விவசாயிகள், மக்கள் தைல மரங்களை அகற்ற பல போராட்டங்கள் நடத்தி, அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதனால் வரும் காலங்களில் அரிமளம், திருமயம் பகுதிகள் இந்த தைல மரங்களால் கடும் வறட்சியை சந்திக்கும் என விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே கடும் வறட்சியையும் தாங்கி வளர கூடிய தைல மரங்கள் தற்போது ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கருகி வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக அரிமளம், திருமயம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள அனைத்து மரங்களும் கருகிய நிலையில் தைல மரங்கள் மட்டும் தள தளவென வளர்ந்து அப்பகுதி மக்களை கடும்பேற்றியது.

இந்நிலையில் தற்போது பல ஆயிரம் மரங்கள் கூட்டமாக ஒரே நேரத்தில் கருகுவது அப்பகுதியில் நிலவும் வறட்சியின் உச்சம் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது அரிமளம், திருமயம் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்ததற்கான அறிகுறியாகவும், காற்றில் ஈரப்பதம் முற்றிலும் குறைந்ததன் விளைவாக பார்க்கப்படுகிறது.

இது பற்றி அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது:
கடந்த சில ஆண்டுகளாக தைல மரத்தின் தீமைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கிணற்றில் போட்ட கல்லை போல் மனுக்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டு இருந்து விடுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டது. தற்போது எந்த மரத்தை நட வேண்டாம் என்று எதிர்த்து வந்தோமோ அந்த மரங்களும் கருகி வருகிறது. அடுத்தது எங்கள் பகுதி மக்கள் மடியும் வரை இதற்காக தீர்வு கிடைக்காது என ஆவேசத்துடன் கூறினர்.

Tags : areas ,Thirumayam ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை