×

வீணாக தரையில் கிடக்கும் புதிய மின்கம்பங்கள்


திருப்பூர், ஜூன் 21:திருப்பூர் மாநகர பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க கொண்டு வரப்பட்ட புது மின்கம்பங்கள் வீணாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகள் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மாநகர பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பெரும்பாலான கம்பங்கள் மேல் உள்ள சிமென்ட் காரைகள் உதிர்ந்து, அதனுள் இரும்புக் கம்பிகள் மட்டுமே தாங்கி நிற்கிறது. மேலும், பெரும்பாலான கம்பத்தில் உள்ள மின் பெட்டிகள் பூட்டு இல்லாததால் திறந்து கிடக்கிறது. இதனால் மின் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. நாளடைவில் மழை மற்றும் வெயிலால் இரும்புக் கம்பிகளும் துருப்பிடித்து மின்கம்பம் கீழே சாயும் நிலையில் உள்ளது. இதுபோன்ற மின்கம்பம் இருக்கும் வழியாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நடந்து செல்கின்றனர். இந்த அபாய நிலையில் உள்ள மின்கம்பம் எப்போது விழுமோ என பயத்திலேயே மக்கள் சென்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம்  ரூபாய் மதிப்பிலான மின்கம்பங்கள் வெயில் மற்றும் மழையில் கிடந்து வீணாகிறது. இத்தகைய, மின்கம்பங்களை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் மாநகர பகுதியில் மிகவும் பழைய பழுதான மின்கம்பங்களே உள்ளது. பெரும்பாலான மின் கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், பல பகுதிகளில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை மாற்ற வேண்டும், என்றனர்.

Tags : ground ,
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி