×

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குட்டை

திருப்பூர், ஜூன் 21:திருப்பூர் 13வது வார்டு குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி 13வது வார்டு பகுதியில் ஸ்ரீவித்யா நகர், அணைப்பாளையம், கொங்கணகிரி உள்ளிட்ட பல இடங்களில் எங்கு பார்த்தாலும், சாக்கடை கழிவு நீரும், குப்பைகளும் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு, மக்கள் வாழ முடியாத சூழல் நிலவுகிறது. இப்பகுதியில் முக்கியமாக  சாக்கடை மற்றும் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. அணைப்பாளையம் பகுதியில் உள்ள ரோட்டில் சாக்கடை கழிவு நீர் தேங்குவற்கு காரணம், 11,12,13,14 ஆகிய நான்கு வார்டுகளிலிருந்து வரும் கழிவு நீர் இந்த வழியாக தான் வெளியேறுகிறது. சாக்கடை கழிவு நீர் வெளியேறும் வழி சிறியதாக இருப்பதால், ரோட்டில் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதியில் அணைப்பாளையம் ரோட்டு ஓரத்தில் நீண்ட காலமாக தனியார் இடம் ஒன்று குட்டையாக உள்ளது. குட்டை மூடப்படாமல் கிடப்பதால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீர் தினமும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.  மேலும் மழை காலங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து ரோடுகளில் தேங்கி நிற்கிறது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி  செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடாத முடியாத நிலை உள்ளது. எனவே, உடனடியாக இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் இந்த குட்டையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கக்கூடிய மழை நீரில் நாளடைவில் கொசு ஆயிரக்கணக்கில் உற்பத்தியாகிறது.  கொசு மூலம் இப்பகுதியில் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதன் அருகில் குறுகிய ரயில்வே பாலம் உள்ளது. இதன் வழியாக சிறிய சாக்கடை செல்கின்றது. இந்த ரயில்வே பாலம் நீண்ட காலமாக சரி செய்யப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில் சாக்கடை நீர் வழிந்தோடி சுகாதாரம் சீர்கெடுகிறது. போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றனர்.

Tags : Sewage pond ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...