×

அறந்தாங்கி அருகே ரேஷன் அரிசி பட்டை தீட்டி விற்கப்படுகிறதா?

அறந்தாங்கி, ஜூன் 21: அறந்தாங்கி அருகே தனியார் மாடர்ன் ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி பட்டை தீட்டி விற்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அறந்தாங்கி அடுத்த ரெத்தினக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான மாடர்ன் ரைஸ்மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை பட்டை தீட்டி, மூடைகளாக்கி விற்பனை செய்யப்படுதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.

புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் வேலுவாசகம், தியாகராஜன், வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை ரைஸ் மில்லிக்கு திடீரென்று சென்று ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து அங்கு இருந்து 7.5 டன்(7500 கிலோ)அரிசியில் இருந்து அரிசி மாதிரிகளை எடுத்துக் கொண்டு, 7.5 டன் அரிசியையும், மாதிரிக்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி ரேஷன் அரிசியா?, இல்லையா என்பது குறித்த அறிக்கை வரும்வரை அந்த அரிசியை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என முடக்கி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த விபரங்களை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட வருவாய் அலுவலருக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரிசியின் தரம் குறித்த ஆய்வு முடிவு தெரிந்த பின்னரே, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Aranthangi ,
× RELATED அறந்தாங்கியில் பைக்குகள் மோதிய விபத்தில் சவுண்ட்சர்வீஸ் தொழிலாளி பலி