×

மஞ்சூரில் இயங்கி வந்த தேயிலை மண்டல அலுவலகம் மூடல்

மஞ்சூர், ஜூன் 21: மஞ்சூரில் இயங்கி வந்த குந்தா மண்டல தேயிலை வாரிய அலுவலகம் மூடப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தென்னிந்திய தேயிலை வாரியத்தின் தலைமை அலுவலகம் குன்னுாரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மஞ்சூர், கோத்தகிரி பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த அலுவலகங்கள் மூலம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் பயனடைந்தனர்.  மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் மட்டும் சுமார் 10ஆயிரம் ஹெக்டருக்கும் மேல் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் சுமார் 6 ஆயிரத்து 500 ஹெக்டரில் தேயிலை பயிரிட்டுள்ள சுமார் 10 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் குந்தா மண்டல தேயிலை வாரிய அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு தேயிலை வாரியத்தின் மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள், அனைத்தும் மண்டல அலுவலகத்தின் மூலம் எளிதாக கிடைத்து வந்தது.

மேலும் அந்தந்த காலநிலைக்கேற்ப தேயிலை சாகுபடி மேற்கொள்வது குறித்து கள அலுவலர்கள் மூலம் அவ்வப்போது பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் மஞ்சூரில் செயல்பட்டு வந்த தேயிலை வாரியத்தின் குந்தா மண்டல அலுவலகம் திடீரென மூடப்பட்டது. அலுவலகம் மூடப்பட்டதால் தேயிலை வாரியத்தின் திட்டங்களை இதுவரை உள்ளூரிலேயே பெற்று வந்த குந்தா பகுதியை சேர்ந்த விவசாயிகள் இனிமேல் தேயிலை வாரிய பயன்களை பெற குன்னுாரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொலைதுார கிராமங்களான கிண்ணக்கொரை, இரியசீகை போன்ற சரிவர போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேயிலை வாரிய பயன்களை பெற குன்னூர் பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து திரும்ப கூடுதல் செலவீனம், காலவிரயத்துடன் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு கூறுகையில், ‘நிர்வாக மேம்பாடு மற்றும் செலவினங்கள் குறைப்பு நடவடிக்கையாகவே தென்னிந்திய தேயிலை வாரியத்தின் குந்தா, கோத்தகிரி உள்பட 4 அலுவலகங்கள் மூடப்பட்டது. இதேபோல் அசாமில் 12 அலுவலகங்கள் மூடப்பட்டது. தேயிலை விவசாயிகள் தேயிலை வாரியத்தின் அனைத்து திட்டங்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்தே ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் குறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து திட்டங்களை பெற்று தருவார்கள்,’’ என்றார்.

Tags : office ,Tea Zone ,Manjore ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்