×

நடைபாதை இன்றி மக்கள் தவிப்பு

பந்தலூர், ஜூன் 21 : பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி தேவாலா வாளவயல் பகுதியில் போதிய நடைபாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.  பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் முருகன் கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக வசிக்கின்றனர். இப்பகுதியில் தியாகராஜ் என்பவர் வீட்டின் வழியாக  கிராமபகுதிக்கு செல்லும் நடைபாதையை நெல்லியாளம் நகராட்சி மூலமாக சிமென்ட் சாலை மற்றும் சிறுபாலம் அமைத்துதர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் நடைபாதை சேறும் சகதியுமாக இருப்பதால்  பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள்  மற்றும் பெண்கள் உள்ளிட்டோர்  சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி நடைபாதை அமைத்துதர நடவடிக்கை எடுக்க
வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்