×

நாகுடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்து நிறுத்தம்

அறந்தாங்கி, ஜூன் 21: நாகுடியில் இருந்து சென்னைக்கு கடந்த 6 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த அரசு விரைவுப் பேருந்தை நிர்வாகம் திடீரென்று நிறுத்தியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள சிறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நேரடியாக பயணிகள் சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளை இயக்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை அடுத்த நாகுடி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. அது தவிர தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் அறந்தாங்கி, மீமிசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

குறிப்பாக நாகுடி பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து வசதி செய்யப்பட்டதால், நாகுடியை சுற்றிலும் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடிந்தது. இந்த நிலையில் அறந்தாங்கி பகுதியில் இருந்து சென்னை சென்று வந்த பல்வேறு பேருந்துகளை பயணிகளின் வசதிக்காக இயக்காமல், போக்குவரத்து துறை முடக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் அறந்தாங்கி பனிமணை பராமரிப்பில், அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தும், மீமிசலில் இருந்து சென்னைக்கு செமி அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி, மணமேல்குடி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து துறை சார்பில் 200 கி.மீ தூரத்தில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்கிவந்த பேருந்துகளை, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஒப்படைப்பு செய்தது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு இயக்கிய பேருந்தை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னை பனிமணைக்கும், மீமிசலில் இருந்து இயக்கப்பட்ட செமி அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக திருச்செந்தூர் பணிமனைக்கும் மாற்றியது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துகழகத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு அந்த பேருந்துகள் தினமும் அனைத்து இருக்கைகளும் நிரம்பியபடியே சென்று வந்தன. ஆனால் நிர்வாக மாற்றத்திற்கு பிறகு அந்த பேருந்துகளை முறையாக தொடர்ந்து இயக்காததால் பயணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக தஞ்சாவூர் பணிமனை பராமரிப்பில் நாகுடியில் இருந்து சென்னைக்கு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து பெரும்பாலான நேரங்களில் முழு இருக்கைகளும் நிரம்பியபடியே சென்னை சென்றன. இந்த நிலையில் இந்த பேருந்து தஞ்சாவூர் பணிமனையில் இருந்து புதுச்சேரி பணிமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த பேருந்து முறையாக இயக்கப்படாததால், பயணிகள் இந்த பேருந்தில் சென்னைக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். இதனால் இந்த பேருந்து தற்போது வசூல் என்பதை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நாகுடியில் இருந்து சென்னைக்கு இயக்கிய அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்தை மீண்டும் இயக்குவதோடு, அந்த பேருந்தை அருகே உள்ள தஞ்சாவூர் பணிமனையில் இணைத்து இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் அவதி தனியார் ஆம்னி பேருந்து
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:  அறந்தாங்கியில் இருந்து 4 தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டுமே சென்னை சென்று வந்தன. ஆனால் தற்போது அறந்தாங்கியில் இருந்து மட்டுமே 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை சென்று வருகின்றன. இதற்கு காரணம் நாகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயங்கி வந்த அரசு விரைவு பேருந்துகளை நிறுத்தியதால்தான். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாட்டுடமையாக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகள் லாபம் பார்க்கும் வகையில் போக்குவரத்து துறை நிறுத்தியுள்ளது பயணிகளையும், பொதுமக்களையும் வேதனைப்பட வைத்துள்ளது. இ;ந்த நிலை நீடித்தால், தொடர்ந்து இப்பகுதியில் இயங்கும் அரசு விரைவு பேருந்துகளும் நிறுத்தப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...