×

சிவகிரியில் உள்ள பாரதியார் கலைக் கல்லூரி மூடப்பட்டது?

சிவகிரி ஜூன் 21:  ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த  2012ம் ஆண்டு முதல் கோவை பாரதியார் பல்கலைகழக உறுப்பு கல்லூரியாக பாரதியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு உள்ள இந்த கல்லூரிக்கான புதிய கட்டிடம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் கனகமலை அடிவாரத்தில் கட்டப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டன. இது குறித்து பெற்றோர்கள் கேட்டபோது சிவகிரியில் உள்ள கல்லூரியில் கலைப் பிரிவு பாடங்கள் தொடர்ந்து செயல்படும். சிவகிரி கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றப்படமாட்டாது என பல்கலைக்கழக தரப்பிலும், அரசு தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஆண்டு சிவகிரியில் உள்ள கலைக் கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் கலைப்பிரிவில் படித்து வந்த நிலையில் தற்போது  நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் சிவகிரியில் உள்ள கலைப்பிரிவுக்கான கல்லூரி திறக்கப்படாமல் உள்ளது. சிவகிரி அரசு கல்லூரியில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டது. கல்லூரிக்குள் 10க்கும் மேற்பட்ட வகுப்பறைகளின் சுவர் உடைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சிவகிரியில் கல்லூரி திறந்த ஆண்டை குறிப்பிட்டு  ஜெயலலிதா பெயருடன் இருக்கும் கல்வெட்டு அட்டையை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி முகப்பில் எந்தவொரு அறிவிப்பும் வைக்கப்படவில்லை.

Tags : Bharathiyar Arts College ,Sivagiri ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது