அரசு பள்ளியில் கழிப்பறை அருகே சத்துணவு கூடம்

ஈரோடு, ஜூன் 21:ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவு கூடம் கழிப்பறை அருகில் அமைந்துள்ளது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 120 மாணவிகள் சத்துணவு சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு  இங்குள்ள பழைய கட்டிடத்தில் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வரும் நிலையில் வெறும் 120 மாணவிகள் மட்டுமே சத்துணவு சாப்பிடும் நிலை உள்ளது. இந்த மாணவிகளுக்கு உணவு சமைக்கும் இடமும் பாழடைந்த கட்டிடமாக உள்ளது.  இந்நிலையில், புதிதாக சத்துணவு கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்துணவு மையம் கட்டுவதற்காக ரூ.7.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் நேற்று சத்துணவு கூடத்தை அதிமுக எம்எல்ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம் திறந்து வைத்தனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள சத்துணவு கூடம் ஒதுக்குப்புறமாக உள்ள கழிப்பறை அருகே உள்ளது.

இதைப்பார்த்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். கழிப்பறை அருகிலேயே சத்துணவு கூடமா என மாணவிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். கழிப்பறையில் இருந்து வெளியேறும் கொசுக்கள், ஈக்கள் மூலமாக உணவுகளில் நோய் பரவ வாய்ப்புள்ளது. ஏற்கனவே, சத்துணவு சாப்பிடும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் மேலும் மாணவிகள் சத்துணவு சாப்பிடாமல் புறக்கணிக்கும் நிலை தான் ஏற்படும் என பெற்றோர் புலம்புகின்றனர்.

Related Stories: