சாக்கடை மேன்ஹோல் உடைப்பு மல்லிப்பட்டினத்தில் குளிர்சாதனத்துடன் சேமிப்பு கிடங்கு அமைத்துத்தர வேண்டும்

சேதுபாவாசத்திரம், ஜூன் 21: மல்லிப்பட்டினத்தில் குளிர்சாதன வசதியுடன் சேமிப்பு கிடங்கு அமைத்துத்தர வேண்டுமென மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. தஞ்சை கலெக்டர் அண்ணாதுரைக்கு மீனவர் பேரவை மாநில பொது செயலாளர் தாஜூதீன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 286 விசைப்படகுகள் இருந்தது. கஜா புயலுக்கு பின் சேதமடைந்ததுபோக தற்போது 115 படகுகள் மட்டும் மீன்பிடி தொழில் செய்து வருகிறது.

மீன்பிடி தடைகாலத்துக்கு பின் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் நாள் கடலுக்கு சென்ற மீனவர்கள் போதிய வருவாயின்றி ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். அதேநேரம் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. இறால், கணவாய், நண்டு ஆகியவைகளை மூன்று தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். அதனால் விலையை அவர்களுக்கு ஏற்றார்போல் நிர்ணயம் செய்து கொள்கின்றனர். இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக வேண்டியுள்ளது.

மேலும் அதிக மீன் வருவாய் உள்ள நேரத்தில் இருப்பு வைக்க முடியவில்லையென கூறி மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விடுகின்றனர். அதேபோல் கடந்த 15ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவு வருவாய் கிடைத்ததால் வருவாயின்றி ஏமாற்றத்துடன் கரை திரும்பிய தஞ்சை மாவட்ட மீனவர்களையும் சேர்த்து கடலுக்கு செல்வதை நிறுத்தி விட்டனர். அதையும் மீறி கடலுக்கு சென்றால் கிடைக்கக்கூடிய மீன் வகைகளை சேமித்து வைக்க வசதியில்லாமல் பாதிப்படையும் சூழ்நிலை உள்ளது.

எனவே மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் மல்லிப்பட்டினம் புதிய துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் குளிர்சாதன வசதியுடன் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். மீனவர்கள் சேமித்து வைக்கும் பொருட்களுக்கு உரிய வாடகை தருவதற்கும் மீனவர்கள் தயாராக உள்ளனர். அத்துடன் மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டு, கணவாய்களுக்கு அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: