×

சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி நகைக்கடை அதிபர் சிறையில் அடைப்பு

ஈரோடு, ஜூன் 21:அந்தியூரில் தங்கநகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி செய்த நகைக்கடை அதிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கவேல் மகன் முரளிக்குமார் (34), வேல்பாண்டியன் (36). இவர்கள், மேட்டூரை தலைமையிடமாக கொண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ‘ஜெயம் நகைக்கடை’ மற்றும் ‘ஜெயம் எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரம் வெளியிட்டனர். இதை நம்பி அந்தியூர் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பல லட்சம் ரூபாயை, இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுவனத்தை மூடிவிட்டு முரளிக்குமாரும், வேல்பாண்டியனும் திடீரென தலைமறைவாகினர். இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் அந்தியூர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், இருவரும் ரூ.2 கோடி அளவுக்கு முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முரளிக்குமார், வேல்பாண்டியன் ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந் நிலையில், நேற்று முன்தினம் முரளிக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். தலைமறைவான வேல்பாண்டியனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை