ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள் விரைவில் அறிமுகம்

கும்பகோணம், ஜூன் 21: ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அடுத்த ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இது டெல்டா மாவட்டத்தில் புதிய நெல் ரகங்களை கண்டுபிடிப்பதில் சாதனை படைத்து வருகிறது. கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக 53 நெல் வகைகளை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு நீர் தட்டுப்பாடு பெரும் சவாலாக உள்ளதால் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு விவசாயிகள் ஒன்று திரண்டு அவரவர் நிலப்பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்க வேண்டும்.

இதன்மூலம் பயிர் வளர்ச்சி பெறும் கடைசி காலகட்டத்தில் ஏற்படும் நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஏதுவாக இருக்கும். அடுத்தபடியாக நீர் குறைவாக தேவைப்படும் மக்காச்சோளம் மற்றும் இதர குறுகியகால பயிர்களான காய்கறி பயிர்களை பயிர் செய்து நாம் மகசூலை பெருக்க முடியும். ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிப்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இது வரக்கூடிய காலங்களில் ஏற்படக்கூடிய வறட்சியை தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் அமையும் என்றார்.

Related Stories: