×

மானிய விலை ஸ்கூட்டர் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூன் 21: திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 2018-19ம் நிதியாண்டில் தகுதியான மகளிருக்கு அரசின் மானிய விலையிலான இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் பெறும் வாகனமானது 125 சிசிக்கும் மேற்படாத திறன் கொண்ட வாகனமாக இருக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி மற்றும் அதற்குப் பின்னர் தயாரிக்கப்பட்ட புதிய இருசக்கர வாகனமாகவும் இருக்க வேண்டும்.

மேலும் இந்த வாகனங்களை பெறுவதற்கு அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நலவாரியங்களில் பதிவு பெற்ற மகளிர், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள், சிறு தொழில் மற்றும் சுயதொழில் புரியும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு திட்டங்களின் கீழ் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் தொகுப்பு ஊதியத்தில் அல்லது தினக்கூலியிலோ அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாகவோ பணிபுரியும் பெண்கள் தகுதியுடையவர்களாவர். மேலும் வங்கிகளில் ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரியும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு வயது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் நாளில் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவராக இருக்க வேண்டும். மகளிரை குடும்பத் தலைவியாகக் கொண்ட மகளிர் ஆதரவற்ற விதவைகள் மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் திருமணமாகாத 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் ஆகியவற்றில் வழங்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் மேற்படி அலுவலகங்களில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், இருப்பிட ஆதாரம், வருமான சான்று, பணிபுரிவதற்கான ஆதாரம், ஆதார் கார்டு நகல், கல்வித்தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், முன்னுரிமை கோருவதற்கான சான்று, சாதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் வாங்க உத்தேசித்திருக்கும் இருசக்கர வாகனத்திற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்பட்டியல் போன்றவற்றை இணைத்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது